/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போல்டா வேலை செய்வாங்களா ஆளு? கோல்டு ஆசையை துாண்டும் வேலு...
/
போல்டா வேலை செய்வாங்களா ஆளு? கோல்டு ஆசையை துாண்டும் வேலு...
போல்டா வேலை செய்வாங்களா ஆளு? கோல்டு ஆசையை துாண்டும் வேலு...
போல்டா வேலை செய்வாங்களா ஆளு? கோல்டு ஆசையை துாண்டும் வேலு...
ADDED : டிச 23, 2025 05:02 AM
சோ பாவில் அமர்ந்து நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்த சித்ராவிடம், காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''தி.மு.க. மகளிரணி மாநாட்டுல ஒன்றரை லட்சம் பேரை திரட்டப் போறாங்களாமே...'' என ஆச்சரியமாக கேட்டாள்.
''ஆமாப்பா! செந்தில்பாலாஜி தலைமையில ஆலோசனை கூட்டம் நடத்துனாங்க. மேற்கு மண்டலத்துல 10 ஆயிரம் பூத் இருக்குதாம்; பூத்துக்கு 15 பேர் வீதம் அழைச்சிட்டு வர உத்தரவு போட்ருக்காரு. மாவட்டத்துல இருக்கற 10 தொகுதிகள்ல இருந்து 50 ஆயிரம் பேர் வரணுமாம்''
''பகுதி கழக செயலாளர்களுக்கு படிவம் கொடுத்து, வர்றவங்க மொபைல் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை எண் எழுதி தர சொல்லியிருக்காங்க. வாக்காளரா இல்லைன்னா அழைச்சிட்டு வர கூடாதாம்”
''கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் வரலயாமே...''
''வெளியூர்ல இருக்றதா சொல்லி, ஒதுங்கிட்டாராம். நிகழ்ச்சிகள தவிர்த்தாலும், சமூக வலைதளத்துல பதிவுகள் போட்டுகிட்டே இருக்கார். போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்றாரு...''
சீனியர்ஸ் அதிருப்தி ''கார்த்திக் மாதிரியே சீனியர்ஸ் பலரும் அதிருப்தில இருக்றதா சொல்றாங்களே... ''
''அதுவும் உண்மைதான்! காரமடைல கவுன்சிலரா இருக்கறவருக்கு, கட்சி பொறுப்பு கொடுத்திருக்கறது, மத்தவங்களுக்கு பிடிக்கலை. அவரை விட சீனியர்கள் பலர் இருக்காங்க. பல வருஷம் பாடுபட்டு, ஜெயிக்க வச்சவங்கள ஓரங்கட்டிட்டு, ஜூனியரை நியமிக்கலாமானு அதிருப்தி''
''பணம் வசூலிக்க தடை விதிச்சிருக்கறதா ஒரு ஆச்சரிய தகவலும் கேள்விப்பட்டேனே...''
''கிண்டல் தான். ஆனா, தகவல் உண்மை தான். பணக்காரங்களா தேடி போய், கட்சி நிகழ்ச்சி நடத்றோம்னு பெயரைச் சொல்லி, வசூல் வேட்டை நடத்றாங்களாம். நிதி கொடுத்தவங்களே செந்தில்பாலாஜிக்கு தகவல் பாஸ் பண்ணாங்களாம். அவர் காண்டாகி, 'பணம் இல்லைன்னா சொல்லுங்க; நானே பார்த்துக்கிறேன். வசூல் எல்லாம் உடனே நிறுத்துங்க'ன்னு கறாரா சொல்லிட்டாராம். மகளிரணி மாநாடு பெயரை சொல்லி, யாரும் வசூல்ல இறங்கிட கூடாதுன்னு முன்னெச்சரிக்கையாம்...'' என்ற சித்ரா, ''பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துல தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் லடாய் தீரலையாமே...'' என கேட்டாள்.
''ஆமாக்கா, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிக்கும், காங்கிரஸ் வட்டார செயலாளருக்கும் மோதல் அதிகமாகுதாம். சமீபத்துல நடந்த கூட்டத்துக்கு காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கலை. கூட்டணியில இருக்கற மத்த கட்சிக்காரங்க கலந்துக்கிட்டாங்க. இந்த ஏரியாவுல ஏற்கனவே தி.மு.க.வுக்கு பலம் இல்லை; காங்கிரசை பகைச்சுக்கிட்டா இன்னும் மோசமாகும்னு கூட்டணி கட்சிக்காரங்க கவலைல இருக்காங்க,''
சீனியர்களுக்கே வாய்ப்பு ''அ.தி.மு.க. தரப்புல என்ன நடக்குதுனு சொல்லவே இல்லையே...''
''இந்த தடவை ஆட்சிய பிடிக்கலைன்னா, அடுத்த அஞ்சு வருஷம் கட்சி நடத்துறதே சிக்கலாயிடும்னு பயப்படுறாங்க. புதுமுகங்கள நிறுத்தி ரிஸ்க் எடுக்றத விட, சீனியர்களே மறுபடியும் களமிறங்க போறதா சொல்றாங்க. தொண்டாமுத்துாருக்கு வேலுமணி, சிங்காநல்லுாருக்கு ஜெயராமன் விருப்ப மனு கொடுத்திருக்காங்க. மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன், மறுபடியும் தெற்கு தொகுதிய கேட்டிருக்காரு,''
''பா.ஜ. என்ன செய்றாங்க?”
“லோக்சபா தேர்தல்ல அதிக ஓட்டு வாங்குனதுனால, இந்த தடவை ரெண்டு தொகுதி கேட்றாங்களாம். சிங்காநல்லுார், கோவை தெற்கு தரணும்னு கேட்ருக்காங்க''
''அவங்க கேட்டத அ.தி.மு.க. கொடுத்திருவாங்களா?”
“மாட்டாங்க. 2021ல தெற்கு தொகுதி மக்கள் தாமரைக்கு ஓட்டு போட்டாங்க; 2024 லோக்சபா தேர்தல்லயும் போட்டாங்க; 2026 லயும் தாமரைக்கு ஓட்டு கேட்டா, ரெட்டை இலை சின்னத்தையே மறந்துருவாங்க; அதனால தெற்கை நாம வச்சிகிட்டு, வடக்கை கொடுக்கலாம்னு பேசிக்கிறாங்க.''
தங்க நாணயம் பரிசு ''பிரமாண்டமா பூத் கமிட்டி கூட்டம் நடத்தி, திமுக தரப்பை மிரட்டிட்டாராமே, வேலுமணி...''
''ஆமா... பேரூர் செட்டிபாளையத்துல மாநாடு மாதிரி திறந்தவெளில நடத்துனாரு. நம்ம மாவட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில என்னென்ன செஞ்சோம்னு பெரிய்ய லிஸ்ட் வாசிச்சாராம். தி.மு.க. செய்யக்கூடிய தில்லுமுல்லு எல்லாம் நமக்கு தெரியும்; உஷாரா இருக்கணும்னு சொல்லிருக்காரு. 2021 தேர்தல்ல அதிக ஓட்டு வாங்கின பூத் பொறுப்பாளர் 7 பேருக்கு தங்க நாணயம் கொடுத்திருக்காரு. முதல் பரிசு 3 பவுன், ரெண்டாம் பரிசு 2 பவுன், மூன்றாம் பரிசு 1 பவுன். 2026 தேர்தல்ல அதிக ஓட்டு வாங்கி தர்றவங்களுக்கு இதவிட பெரிய பரிசு காத்திருக்குன்னு சொல்லிருக்காரு. தி.மு.க. நெசமாவே மிரண்டு போயிருக்காங்க''
லட்சத்தில் லஞ்சம் ''கிராம உதவியாளர் பதவிக்கு லட்சக்கணக்குல லஞ்சம் கேக்குறதா சொல்றாங்களே...''
''தாலுகாவுக்கு ஆறேழு, சில தாலுகாவுல 9 பணியிடம் இருக்கு. ஒரு இடத்துக்கு 3 லட்சம் வாங்குறது வழக்கமாம். போட்டி அதிகமானதால 8 லட்சம் வரை ஏத்திட்டாங்களாம். கட்சிக்காரங்க கிட்ட இருந்து நிறைய சிபாரிசு கடிதம் வந்திருக்கு. ஆனா, பணம் இல்லாம பதவி இல்லைனு தெளிவா சொல்லிட்டாங்களாம்.”
“லஞ்ச ஒழிப்பு துறை என்ன செய்யுது..?” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்தாள் சித்ரா.
பேக்கரியில் மதுபானம் ''போதை பொருள் விற்பனை பேக்கரி வரை வந்தாச்சாமே...''
''ஆமா, மித்து! விளாங்குறிச்சி - விநாயகபுரம் ரோட்ல பள்ளி கூடத்துக்கு எதிர்ல உள்ள பேக்கரியில விற்பனை ஜோரா நடக்குது. சீருடைல வந்தே மாணவர்கள் வாங்கிட்டு போறாங்க. ராத்திரி 11 மணிக்கு அப்புறம் டபுள் விலைக்கு டாஸ்மாக் சரக்கும் கிடைக்குதாம். மாமூல் கரெக்டா கொடுத்துடறதால போலீஸ் கண்டுக்கறதே இல்லையாம்''
''அதிகாரி டிரைவரோட 'அட்ரா சிட்டி' தாங்க முடியலைன்னு ஊழியர்கள் புலம்புறதா கேள்விப்பட்டேனே...''
''தொண்டாமுத்துார் ஏரியால குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிக்கு கார் ஓட்டுற டிரைவர், துறை வேலைகள்ல தலையிடுறாராம். அங்கன்வாடி பணியாளர்களை மொபைல் போன்ல கூப்பிட்டு, அதிகார தொனில பேசுறாராம். அதிகாரிக்கு பதிலா அவரே டீடெய்ல் எல்லாம் கேட்குறாராம். 'வடவள்ளிக்காரர்' ஆதரவு இருக்கறதா சொல்லி, 'கெத்து' காட்டுறாராம்... '' என்றபடி, நகர் வலம் புறப்பட்டாள் சித்ரா.

