/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றாலை கொள்கை சைமா வரவேற்பு
/
காற்றாலை கொள்கை சைமா வரவேற்பு
ADDED : ஜன 24, 2026 05:04 AM
கோவை: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் துரை பழனிசாமி அறிக்கை:
தமிழகத்தில் பெரும்பாலான காற்றாலைகள் 20 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டவை. இக்காற்றாலைகளின் மின்சாரத்தை தொழிற்சாலைகள் பயன்படுத்தினாலும் மின் வைப்புத் திட்டம் மற்றும் 2025ல் கொண்டு வரப்பட்ட புதிய காற்றாலைக் கொள்கை ஆகியவை, ஜவுளி ஆலைகளுக்கு பேரிடியாக இருந்தன. பழைய காற்றாலைகளில் இருந்து தொடர்ந்து மின்உற்பத்தி செய்யவும், காற்றாலைகளின் காலக் கெடுவை 40 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் சைமா உள்ளிட்ட அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், முதல்வர் புதிய காற்றாலைக் கொள்கையை அறிவித்துள்ளார். ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் இந்த அறிவிப்பை, சைமா வரவேற்கிறது. வருடாந்திர காற்றாலை மின் வைப்புத் திட்ட கட்டணம், 1 மெகா வாட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சத்தில் இருந்து, ஆண்டுக்கு ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய காற்றாலைகளுக்கு எளிய முறையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றாலைக் கொள்கை பசுமை மின்சாரத்தை ஊக்குவித்து, போட்டித்திறனை அதிகரிக்கும். மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம், மின்சார வீலிங் ஒப்பந்தம் போன்றவை நீட்டிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. 2018க்குப் பிறகு நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு மின் வைப்புத் திட்டத்தை முதல்வர் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

