காற்றுக்கு சாய்ந்த மரங்கள் வீதம்பட்டி ரோட்டில் பாதிப்பு
காற்றுக்கு சாய்ந்த மரங்கள் வீதம்பட்டி ரோட்டில் பாதிப்பு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:07 PM

உடுமலை: உடுமலை அருகே, வீதம்பட்டியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், ரோட்டில் மரம் விழுந்து, பெரியபட்டி ரோட்டில் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
உடுமலை அருகே, பெரியபட்டியில் இருந்து நெகமம் செல்லும் பிரதான ரோட்டில் வீதம்பட்டி பகுதியில், நேற்று மாலை 4:00 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ரோட்டோரத்தில் இருந்த இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அருகில் இருந்த இறைச்சி விற்பனை கடையில், மழைக்காக ஒதுங்கியிருந்து மக்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். பெரிய மரம் ரோட்டின் குறுக்கே விழுந்ததால், அவ்வழியாக போக்குவரத்து பாதித்தது.
உடுமலை – வீதம்பட்டி, பொள்ளாச்சி – நெகமம் – வீதம்பட்டி – வாகத்தொழுவு வழித்தட பஸ்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினர் வராததால், வீதம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும், கிராம மக்களும் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
குறுகலான ரோட்டில் விழும் நிலையில் இருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என, மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
