/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதிய ஊழியர்கள் இல்லாமல் நகரமைப்பு பிரிவு தடுமாற்றம்!
/
போதிய ஊழியர்கள் இல்லாமல் நகரமைப்பு பிரிவு தடுமாற்றம்!
போதிய ஊழியர்கள் இல்லாமல் நகரமைப்பு பிரிவு தடுமாற்றம்!
போதிய ஊழியர்கள் இல்லாமல் நகரமைப்பு பிரிவு தடுமாற்றம்!
ADDED : அக் 04, 2024 11:32 PM
கோவை : போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு தடுமாறுகிறது.
மக்கள் தொகை அடிப்படையில், கோவை மாநகராட்சிக்கு பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, கடந்த 2022ல் அரசாணை (எண்: 152) வெளியிடப்பட்டது.
அதன்படி, 100 வார்டுகள் உள்ள கோவை மாநகராட்சிக்கு, 301 பணியிடங்கள் மட்டுமே தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை என்ற அடிப்படையில் கணக்கிட்டு, மிக குறைவாகவே பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், 16.50 லட்சம் மக்கள் கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுகள் கடந்து விட்டன.இப்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
இதை புரிந்து, பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஏனெனில், மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் மாநகராட்சியின் பணி முக்கியமானது.
இதில், வீடோ அல்லது வணிக கட்டடமோ அல்லது எவ்வித கட்டடமாக இருப்பினும் நகரமைப்பு பிரிவில் விண்ணப்பித்து, வரைபட அனுமதி பெற வேண்டும். உதவி நகரமைப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கோவை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒருவர் வீதம், ஐந்து உதவி நகரமைப்பு அலுவலர்களே இருக்கின்றனர்.
ஒரு மண்டலத்துக்கு, 20 வார்டுகள் உள்ளன. 20 வார்டுகளில் இருந்து கொடுக்கப்படும் விண்ணப்பங்களை ஒரே ஒரு அதிகாரியே பரிசீலித்து, ஆய்வு செய்வது சிரமமான காரியமாக இருக்கிறது.
அரசாணை 152ல், மண்டலத்துக்கு இருவர் வீதம், உதவி நிர்வாக பொறியாளர் அந்தஸ்தில் 10 உதவி நகரமைப்பு திட்டமிடுநர் பணியிடங்கள் மற்றும், உதவி பொறியாளர் அந்தஸ்தில், 10 நகரமைப்பு ஆய்வர் பணியிடங்கள் தோற்றுவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இன்று வரை இப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மண்டலத்துக்கு ஒருவர் வீதம் உதவி நகரமைப்பு அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
மற்ற பணியிடங்கள் பூர்த்தி செய்யாததால், நகரமைப்பு பிரிவினர் தடுமாற்றம் அடைகின்றனர்.