ADDED : ஜூன் 25, 2026 02:29 AM
கருமத்தம்பட்டி: சூலுார் அருகே நொய்யல் ஆற்றில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது. பெண்ணின் இரண்டாவது கணவர் மற்றும் உறவினர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலுார் அருகே, செங்கத்துறை சாலையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதற்கு பின்னால், நொய்யல் ஆறு ஓடுகிறது. நேற்று காலை, ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக, சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அந்த இடம் கருமத்தம்பட்டி போலீஸ் எல்லைக்குள் வந்ததை அடுத்து, கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். சூலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் ராம சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள், சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், சடலமாக கிடந்த பெண், பல்லடத்தை சேர்ந்த மகேஸ்வரி, 28, என்பதும், திருமணமாகி, 10 வயதில் மகன் இருப்பதும் தெரிந்தது. கணவனை பிரிந்து வாழ்ந்த அவர், 10 நாட்களுக்கு முன், பல்லடம் பெருமாகவுண்டன் பாளையத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஆனந்தக்குமாரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. ஆனந்தகுமார், 27, உறவினர் ஆறுமுகம், 50 உட்பட சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
