/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2026 சட்டசபை தேர்தல் வேலை சூடுபிடித்தது! வந்தது கூடுதல் வாக்காளர் படிவம்; கோவையிலும் அச்சடிப்பு
/
2026 சட்டசபை தேர்தல் வேலை சூடுபிடித்தது! வந்தது கூடுதல் வாக்காளர் படிவம்; கோவையிலும் அச்சடிப்பு
2026 சட்டசபை தேர்தல் வேலை சூடுபிடித்தது! வந்தது கூடுதல் வாக்காளர் படிவம்; கோவையிலும் அச்சடிப்பு
2026 சட்டசபை தேர்தல் வேலை சூடுபிடித்தது! வந்தது கூடுதல் வாக்காளர் படிவம்; கோவையிலும் அச்சடிப்பு
ADDED : நவ 05, 2025 11:09 PM

கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தேவையான படிவங்கள், சென்னையில் அச்சடிக்கப்பட்டு தருவிக்கப்பட்டுள்ளன. கோவை வடக்கு, சிங்காநல்லுார் தொகுதிகளுக்கு மட்டும், கோவையில் அச்சடிக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், ஒவ்வொருவருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்படுகின்றன.
பூர்த்தி செய்த ஒரு படிவத்தை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இன்னொரு படிவத்தில் அவர் கையெழுத்திட்டு, ஒப்புகைச்சீட்டாக திருப்பித் தருவார். அதற்காக, 64 லட்சத்து 50 ஆயிரத்து 396 படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன.இவை சென்னையில் அச்சடிக்கப்பட்டு, தருவிக்கப்பட்டன.
கோவையிலும் அச்சடிப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று வந்தடைந்த படிவங்கள் சட்டசபை வாரியாக பிரிக்கப்பட்டு, வேனில் அனுப்பி வைக்கப்பட்டன. கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லுார் தொகுதிகளுக்கான படிவங்கள், அவசர அவசியம் கருதி கோவையில் உள்ள அச்சகங்களில் அச்சடிக்கப்படுகின்றன.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், முதல்கட்டமாக 200 படிவங்கள் வழங்கப்பட்டு, திருத்தப் பணி துவக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும், 200 படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விவரம் முக்கியம் படிவத்தில் மிக முக்கியமாக, 2002 அல்லது 2005ல் எந்த தொகுதியில் வாக்காளராக பெயர் இருந்தது என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு முன், 2002ல் கிராமப்புறங்களிலும், 2005ல் நகர்ப்புறத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி நடந்தது.
அந்த பட்டியலில் எந்த தொகுதியில் பெயர் இருந்தது என்கிற விபரம் கேட்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் வாக்காளரின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருந்திருந்தால், வாக்காளரின் தந்தை அல்லது தாத்தா, பாட்டியின் பெயர்களை குறிப்பிட வேண்டும். அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் குறிப்பிடலாம்.
https://erolls.tn.gov.in.electoralsearch/ என்ற இணைய தளம் மூலமாக, முந்தைய பட்டியலில் தேடலாம். தெரியாதபட்சத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவர் என ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்த தகவல், சம்பந்தப்பட்ட வாக்காளர், தமிழகத்தைச் சேர்ந்தவரா, இதே மாவட்டமா அல்லது வேறு மாவட்டமா அல்லது வேறு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவரா என்பதை அறிய உதவுகிறது.
முகவரி மாறிச் சென்றவர்களுக்கு படிவம் வழங்கப்படுவதில்லை
l படிவத்தில் பிறந்த தேதி, மொபைல் போன் எண், ஆதார் அட்டை எண், தந்தை, தாய் அல்லது மனைவி பெயர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால் குறிப்பிட வேண்டும். l அக். 27 அன்று பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வருகின்றனர். அதே முகவரியில் வாக்காளர்கள் தற்போதும் வசித்து வந்தால், படிவம் வழங்கப்படுகிறது. யாரேனும் இறந்திருந்தாலோ அல்லது வேறு முகவரிக்கு இடம் மாறிச் சென்றிருந்தாலோ, அவர்களுக்குரிய படிவம் வழங்கப் படுவதில்லை. l இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள், இரட்டை இடங்களில் ஓட்டுரிமை இருப்பவர்களின் பெயர்களை நீக்குவதற்காகவே இத் திருத்தம் மேற்கொள்வதால், பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் சம்பந்தப்பட்ட வாக்காளர் அம்முகவரியில் வசிக்காத பட்சத்தில், அப்படிவம் வழங்காமல் தனியாக வைக்கப்படுகிறது. l யாரேனும் வேறு தெருவுக்கோ அல்லது வேறு தொகுதிக்குள்ளோ அல்லது வேறு மாவட்டத்துக்கோ இடம் மாறிச் சென்றிருந்தால், அவர்களது பெயர் நீக்கப்படும். அவர்கள், டிச. 9 முதல் ஜன. 8 வரை நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில், அதற்குரிய படிவம் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

