/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைப்பு பாலம் சேதம் தொழிலாளர்கள் அதிருப்தி
/
இணைப்பு பாலம் சேதம் தொழிலாளர்கள் அதிருப்தி
ADDED : பிப் 05, 2026 05:01 AM

வால்பாறை: நல்லகாத்து - ஸ்டேன்மோர் இணைப்பு பாலம் சேதமடைந்ததால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது நல்லகாத்து எஸ்டேட். இங்குள்ள தொழிலாளர்கள் மருத்துவம் மற்றும் பிற அலுவலக விஷயமாக ஸ்டேன்மோர் வந்து செல்ல வேண்டுமானால், 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும்.
இதனிடையே இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில், நல்லகாத்து - ஸ்டேன்மோர் இடையே இணைப்பு பாலம் கட்டப்பட்டது. இதனால், நல்லகாத்து மற்றும் ஸ்டேன்மோர் எஸ்டேட் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.
தற்போது இப்பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இந்த வழியாக தொழிலாளர்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த பாலத்தால், இரு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது பாலத்தின் பக்கவாட்டு பகுதியும், கீழ் பகுதியும் சேதமடைந்த நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, பாலத்தை பயன்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பாலத்தை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

