ADDED : பிப் 19, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
காரமடை: காரமடை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலை மோசமாக உள்ளதால், சாலையை பயன்படுத்துவோர் சிரமப்படுகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக கோவைக்கு, தினமும் ஐந்து முறை பேசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. காரமடை, மருதுார், கன்னார்பாளையம், காளட்டியூர், டீச்சர்ஸ் காலனி, வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், கோவை செல்ல இந்த ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.
காரமடை மேம்பாலத்தில் இருந்து ஸ்டேஷனுக்கு திரும்பும் வழியில், சுமார் ஒரு கிலோ மீட்டர் துார சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தடுமாறுகின்றனர். காரமடை நகராட்சி நிர்வாகம், உடனடியாக சாலையை சீர்படுத்தி தர வேண்டும்.---
