தினமும் ஒரு பக்கம் பேனாவால் எழுதினால் மூளைக்கு பலம்
தினமும் ஒரு பக்கம் பேனாவால் எழுதினால் மூளைக்கு பலம்
ADDED : ஆக 29, 2026 04:49 AM

'தி இந்தியன் பென் ஷோ' என்ற பேனா கண்காட்சி, பாரதி பார்க் பகுதியில் உள்ள 'சனாசா ஸ்கொயர்' ஹாலில் நடந்தது. திருச்சியை சேர்ந்த எம்.பி.எம். ஸ்டேஷனரி நிறுவனம் ஏற்பாடு செய்தது.
அதில் 36 நாடுகளில் தயாரான பேனாக்கள் பல நிறங்களில், வடிவங்களில் இடம் பெற்றிருந்தன. தங்கம், வெள்ளி, மரத்தாலான பேனாக்களும் இருந்தன. விலை 100 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை!
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் செந்தில் கூறுகையில், ''கல்வி முறையே மாறி விட்டது. ஆன்லைன் தேர்வுகள் அதிகமாகி விட்டன. பேனாவால் எழுதுபவர்கள் குறைந்து விட்டனர். கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரிண்ட் எடுப்பதால், எழுதும் வேலையே இல்லை.
ஆனால் பேனாவால் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். அது மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டும்; முதுமையின் பலவீனத்தை தடுக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
ஆகவே, பேனாவால் எழுதுவதை மறந்து விடக்கூடாது. குழந்தைகளுக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
கையெழுத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இக்கண்காட்சியை எல்லா நகரங்களிலும் நடத்தி வருகிறோம்.
வாய்ஸ் டைப்பிங் வந்து விட்ட நிலையிலும், பவுன்டன் பேனாவில் மை ஊற்றி எழுதி, கையெழுத்தின் அழகை ரசிக்கும் பேனா பிரியர்கள், இப்போதும் இருக்கிறார்கள் என்பதை கண்காட்சியில் பார்க்க முடிந்தது.
