சரியான நேரத்தில் தவறான முடிவு! நினைத்தது ஒன்று; நடந்தது வேறு: சூலுார் விவசாயிகள் அதிருப்தி
சரியான நேரத்தில் தவறான முடிவு! நினைத்தது ஒன்று; நடந்தது வேறு: சூலுார் விவசாயிகள் அதிருப்தி
UPDATED : ஆக 19, 2026 05:42 PM
ADDED : ஆக 19, 2026 05:41 PM

சூலுார்: தண்ணீர் இல்லாமல் சூலுார் சின்ன குளம் வறண்டிருந்த நிலையில், துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், குளத்துக்கு தண்ணீரை திறந்து விட்டு நிரம்பிய அதிகாரிகளின் செயலால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சூலுார் ரயில்வே பீடர் சாலையில் பெரிய குளமும், சின்னக் குளமும் உள்ளன. நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளங்கள் துார் வாரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
குளங்களை துார் வார வேண்டும் என, பல்வேறு விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மழையின்மையால், சூலுார் சின்னக்குளம் வறண்ட நிலையில் இருப்பதால், துார் வார சரியான நேரம் என்பதால், கலெக்டர், எம்.எல்.ஏ., மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம், சூலுார் வட்டார விவசாயிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இம்முறை குளம் துார் வாரப்பட்டு விடும் என, விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த மூன்று நாட்களாக சின்னக்குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், குளம் நிரம்பி கடை போகிறது. இதனால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
சூலுார் நகர கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், ''கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், சின்னக்குளத்தில் தண்ணீர் வறண்டு இருந்ததால், துார் வாரும் பணி துவக்கப்பட்டது. மழை பெய்ததால் பணி நிறுத்தப்பட்டது. சில மாதங்களாக குளம் வறண்டு இருந்தது. துார் வார சரியான நேரம் என, அதிகாரிகளிடம் முறையிட்டோம். நல்லது நடக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், திடீரென குளத்துக்கு தண்ணீரை திறந்து விட்டு, அதிகாரிகள் எங்கள் எதிர்பார்ப்பை குலைத்து விட்டனர்,'' என்றார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறுகையில், ''இத்தனை ஆண்டுகளாக, தண்ணீர் முழு கொள்ளளவு உள்ளது. அதனால், தண்ணீர் குறைந்ததும் துார் வாரும் பணி நடக்கும் என, நீர் வளத்துறையினர் கூறி வந்தனர். இரு மாதங்களாக, குளம் வறண்டு கிடந்தது. துார் வார நடவடிக்கை எடுங்கள் என்றோம். ஆனால், குளத்துக்கு தண்ணீரை திறந்து விட்டு நிரப்பி விட்டனர். இனி மீண்டும் அதே பதிலை தான் அதிகாரிகள் கூறுவர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படும் அதிகாரிகளின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியது. விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
