UPDATED : ஜூலை 07, 2026 10:07 PM
ADDED : ஜூலை 07, 2026 09:22 PM

கோவை: சின்னத்தடாகம் மடத்துறையை சேர்ந்தவர் பிரவீன்குமார், 21; போட்டோ ஷூட் தொழில் செய்தார். இவர் காதலித்த 21 வயது பெண்ணை கரூரை சேர்ந்த மனோஜ்குமார்,24 என்பவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாக காதலித்தார்.
பிரவீன்குமார் காதலிப்பது அறிந்து ஆத்திரமடைந்த மனோஜ்குமார், போட்டோ ஷூட் நடத்த வருமாறு பிரவீன்குமாரை காரில் அழைத்துச் சென்று கிணத்துக்கடவு அருகே கொலை செய்தார். தண்டவாளத்தில் சடலத்தை வீசி தப்பினார். பெ.நா.பாளையம் போலீசார் விசாரித்தனர். மனோஜ்குமார், அவரது நண்பர் கார்த்திக் கோர்ட்டில் சரணடைந்தனர்.
பிரவீன்குமாரின் சடலத்தை சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். அங்கு திரண்ட உறவினர்கள், நண்பர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொலையில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதால் அவர்களை கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கோஷமிட்டனர். போலீசார் சமாதானத்துக்கு பின் கலைந்து சென்றனர்.
