/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜமீன் ஊத்துக்குளியின் அடையாளமான குளத்தை மீட்டெடுக்கணும்! அரசிடம் நிதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி
/
ஜமீன் ஊத்துக்குளியின் அடையாளமான குளத்தை மீட்டெடுக்கணும்! அரசிடம் நிதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஜமீன் ஊத்துக்குளியின் அடையாளமான குளத்தை மீட்டெடுக்கணும்! அரசிடம் நிதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஜமீன் ஊத்துக்குளியின் அடையாளமான குளத்தை மீட்டெடுக்கணும்! அரசிடம் நிதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ADDED : செப் 12, 2024 09:21 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள, கிருஷ்ணா குளம் போதிய பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்குமிடமாக மாறியுள்ளது. இதை துார்வாரி சீரமைக்க அரசிடம் நிதி கோரப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர், ஜமீன்ஊத்துக்குளி - நல்லுார் ரோட்டில் உள்ள, கிருஷ்ணா குளத்தில் தேங்குகிறது. மொத்தம், 8.53 ெஹக்டேர் பரப்பளவில் உள்ள இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், ஜமீன் முத்துார், ஜலத்துார், செல்லாண்டிகவுண்டன்புதுார், ராமபட்டிணம் வழியாக பாய்ந்து, சின்னணை, பெரியணைகள் நிரம்பிய பின், கேரளாவுக்கு சென்று ஆற்றில் கலக்கிறது.
மேலும், நீர்வழித்தடத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து விவசாயம் செழிக்க கைகொடுக்கிறது.மழை பெய்யாத காலத்தில், பொள்ளாச்சி பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் குளத்தில் தேங்குகிறது. இந்த கழிவுநீரையும் விவசாயிகள் பயன்படுத்தி, சாகுபடி செய்கின்றனர்.
ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில், சீசன் காலத்திலும், கோடைக்காலத்திலும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பறவைகள் அதிகளவு வந்து செல்கின்றன.கோடை காலங்களில் வெளி மாநில பறவைகள் இங்கு முகாமிடுகின்றன.
நிர்வாகம் மாறியது!
கிருஷ்ணா குளம் கடந்த, 2000ம் ஆண்டு வரை தெற்கு ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பின், 2001ம் ஆண்டு முதல் கிருஷ்ணா குளம் பராமரிப்பு ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த, 23 ஆண்டுகளுக்கு மேலாக, பேரூராட்சி கட்டுப்பாட்டில் இந்த குளம் உள்ளது.
குளத்தில், அதிகளவு தேங்கும் கழிவுநீரால் மாசுபட்டு காணப்படுகிறது.நீர்ப்பரப்பு முழுவதும், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
பாலித்தீன் டம்ளர், உணவு பொருட்கள் அடங்கிய கவர்களையும் அப்படியே குளத்தில் வீசிச் செல்கின்றனர். இதை பராமரிக்க பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
கொஞ்சம் கவனியுங்க!
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
ஜமீன் ஊத்துக்குளி என்றாலே நினைவுக்கு வருவது கிருஷ்ணா குளம் தான். ஆனால், இந்த குளத்தின் நிலையை கண்டால் பரிதாபமாக மாறியுள்ளது. கழிவுநீர் கலக்காமல் இருக்க பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லை.
குளக்கரையில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு, புதர் சூழ்ந்து காணப்படுகிறது. கழிவுநீர் குளமாக மாறியுள்ள குளத்தினை மீட்டெடுக்க வேண்டும். ஜமீன் ஊத்துக்குளியின் அடையாளமாக உள்ள குளத்தினை துார்வாரி, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து குளத்தில் சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுப்போம்!
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, துணை தலைவர் சையது அபுதாஹீர் ஆகியோர் கூறுகையில், ''கிருஷ்ணா குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார முயற்சிகள் எடுக்கப்படும். மேலும், 'வாக்கிங்' செல்வதற்கு நடைபாதை அமைத்தல், படகு சவாரி துவங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் அரசிடம் நிதி பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

