ADDED : செப் 13, 2024 07:11 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே மர்மமான முறையில் இரண்டு கூரை வீடுகள் எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ், 39; விவசாயி. நேற்று பகல் 1:00 மணியளவில் இவரது கூரை வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. சுரேஷ் கூச்சலிட அருகிலுள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீரால் தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று பலமாக வீசியதால் அருகிலுள்ள சுப்ரமணியன், 47; என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது. இரு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் சுரேஷ் வீட்டிலிருந்த நான்கரை சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரொக்கம், பீரோ கட்டில், எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமானது. சுப்ரமணியன் வீட்டிலிருந்த 70 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் எரிந்து சேதமானது. தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
நிவாரணம் வழங்கல்
தீ விபத்தில் பாதித்த சுரேஷ், சுப்ரமணியன் குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வி.ஏ.ஓ., முரளி முன்னிலையில் பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் அரிசி, வேட்டி, சேலை, ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார். வி.ஏ.ஓ., வீரநடராஜன், கிராம உதவியாளர் காந்தி உடனிருந்தனர்.