/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 25 பேர் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 25 பேர் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:48 AM

கடலுார், : மாவட்ட டிட்டோ ஜாக் அமைப்பு சார்பில் தொடக்க கல்வித்துறையில் மாநில அளவிலான கவுன்சிலிங் முறை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சார்பில் ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர்கள் சீனியாரிட்டியை மாநில அளவில் மாற்றப்பட்ட அரசு ஆணை 243யை ரத்து செய்ய வேண்டும். 243 ஆணையின்படி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடலுார் தொடக்க கல்வி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக் குழு பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி அந்தோணிஜோசப் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சங்கம் முருகன், தங்கதம்பி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வேதரத்தினம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரகுருநாதன், மணிவண்ணன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மஞ்சக்குப்பம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களை கைது செய்து மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.