/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை
/
பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை
பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை
பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஆக 06, 2024 07:20 AM
விருத்தாசலம் : பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ் டாக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டறியும் பரிசோதனை நடப்பதாக புகார் எழுந்தது.
அதையடுத்து, இணை இயக்குனர் உத்தரவின்பேரில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர்.
அதில், அனுமதி பெறாமல் ஒரு ஸ்கேன் இயந்திரம் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 2017, மார்ச் மாதம், சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர் கோப்பெருந்தேவி மீது பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ், விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி, பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ் டாக்டர் கோப்பெருந்தேவிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தார். அபராத தொகையை செலுத்திய டாக்டர் கோப்பெருந்தேவி, மாஜிஸ்திரேட் அனுமதியுடன் ஜாமின் பெற்றார்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்ததால், தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து வந்தோம். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது புகார் வந்ததால், அங்கு ஆய்வு செய்தோம்.
அதில், பாலின தேர்வை கண்டறிந்ததை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அனுமதி பெறாமல் ஒரு ஸ்கேன் இயந்திரம் இருந்தது.
அதையடுத்து, பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ் டாக்டர் கோப்பெருந்தேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது' என்றார்.