/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
20 கோவில்களில் கொள்ளை புவனகிரியில் 4 பேர் கைது
/
20 கோவில்களில் கொள்ளை புவனகிரியில் 4 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2024 05:47 AM

புவனகிரி: கடலுார் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் உண்டியல்களை உடைத்து கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.
புவனகிரி அடுத்த சித்தேரியில் உள்ள கோவிலில் கலசங்கள் திருடு போனது. தொடர்ந்து ஒரே இரவில் புவனகிரி மற்றும் கிளாவடி நத்தம் கிராமத்தில் 4 கோவில்களின் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து புவனகிரி போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
எஸ்.பி., ராஜாராம் உத்தரவை தொடர்ந்து ஏ.எஸ்.பி., ரகுபதி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பாபு, கோபி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளின் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில் சொக்கன்கொல்லை கிராமத்தில் பதுங்கியிருந்த 4 பேரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் விருத்தாசலம் அடுத்த சேப்ளாநத்தம் அம்மன் கோவில் தெரு கண்ணன் மகன் சுரேஷ், 18; முத்துமாரியம்மன் கோவில் தெரு பழனி மகன் குலோத்துங்கன், 20; விருத்தாசலம் குறவன்குப்பம், கீழ்பாதி அம்மன் கோவில் தெரு குப்புசாமி மகன் குமரேசன், 19; மற்றும் ரவிச் சந்திரன் மகன் சக்திதினேஷ் குமார், 19 என்பதும், இவர்கள் மேலும் இருவருடன் சேர்ந்து சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலுார் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கோவில்களில் உண் டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளை அடித்ததும், முட்லுாரில் ஒரு கடையில் பூட்டை உடைத்து திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடிவரு கின்றனர்.