/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முக எலும்புகள் உடைந்த இளைஞருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை
/
முக எலும்புகள் உடைந்த இளைஞருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை
முக எலும்புகள் உடைந்த இளைஞருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை
முக எலும்புகள் உடைந்த இளைஞருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை
ADDED : செப் 01, 2024 04:03 AM

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் முகம் மற்றும் தாடையில் எலும்புகள் சிதைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு, முக மறு சீரமைப்பு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்துள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 22. இவருக்கு கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட விபத்து காரணமாக முகம் மற்றும் தாடையில் உள்ள, 6க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்தன. அதாவது, மேல் மற்றும் கீழ் தாடை, அன்னபிளவு, கன்னம் மற்றும் கண் எலும்புகள் உடைந்தன.
அவர் சாப்பிடும் அனைத்து உணவும் மூக்கின் வழியாக வெளியேறி, புரையேறி பெரும் அவதிக்குள்ளானார். இதனால் மருத்துவமனைகளில் அவரை அனுமதிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து தான் அவர் எலும்புகள் சிதைந்த நிலையிலும் மற்றும் முகம் உள்வாங்கிய நிலையிலும், கடந்த ஜூலை, 13,ம் தேதி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல் மற்றும் வாய்முக அறுவை சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் அப்போதைய நிலை டாக்டர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவரின் வலது கண் முற்றிலுமாக சிதைந்து விட்டதால் கண் பார்வை திரும்ப கிடைக்காது என, கண் மருத்துவர்கள் குழு உறுதி செய்தது. ஆனாலும் முக மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை, அவரின் வாழ்வின் தரத்தை பெரிதும் உயர்த்தும் என மருத்துவக்குழு முடிவு செய்தது.
இதையடுத்து கடந்த, ஜூலை 20ம், தேதி வாய் முக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேவகுமாரி, உதவி பேராசிரியர் நீல் டோமினிக், மயக்க மருந்தியல் துணை பேராசிரியர் தீபக் பவுலோஸ் ஆகியோர் அவருக்கு ஆறு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்த சிகிச்சையில், அவரின் எலும்புகள் அனைத்து ஒன்று சேர்க்கப்பட்டு, ஐந்து டைட்டானியம் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டன.
அன்னப்பிளவும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. பதினைந்து நாட்கள் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த, ஜூலை, 31ம் தேதி அன்று சாப்பிடும் நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சவாலான அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவக்கல்லுாரி இயக்குனர் உதயசங்கர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் பேராசிரியர் தேவகுமாரி நன்றி கூறினார்.