ADDED : ஜூன் 02, 2024 05:35 AM
கடலுார்: சர்வதேச அளவில் தேசத்திற்கு நற்பெயரையும் புகழையும் ஈட்டித்தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
சர்வதேச அளவில் நாட்டிற்கு நற்பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று, இந்திய நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுகள் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது விளையாட்டுத் துறைக்கான 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.
விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்வோர் விண்ணப்பங்களை இணையதளத்தில் உரிய விபரங்களுடன் பதிவேற்றம் செய்து, அதன் நகல்களை கடலுார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு, வரும் 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.