/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
/
என்.எல்.சி.,யில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
என்.எல்.சி.,யில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
என்.எல்.சி.,யில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மார் 01, 2025 07:02 AM

நெய்வேலி; நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11 ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில், பாரிசில் கடந்த ஆக. 28 முதல் செப். 8 வரை நடந்த “பாரா -ஒலிம்பிக்ஸ் பாரிஸ் - 2024” போட்டியில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கினார். மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். எம்.பி., விஷ்ணு பிரசாத் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார். என்.எல்.சி., செயல் இயக்குநர் நாராயண மூர்த்தி வரவேற்றார். பாரிஸில் நடைபெற்ற 2024 -பாரா-ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 4 பதக்கங்களை வென்றுள்ளனர். மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், அதே பிரிவில் மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும், மற்றொரு மகளிர் பேட்மிண்டன் பிரிவில் நித்யா ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மற்றும் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர். இந்நிகழ்ச்சியில், வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது.
முடிவில் என்.எல்.சி., கல்வி மற்றும் விளையாட்டுத்துறை செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.