ADDED : செப் 02, 2024 09:33 PM

நெய்வேலி : என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளிக்கு, தேசிய மேலாண்மை உச்சி மாநாட்டில், தொலைநோக்கு தலைமைத்துவத்திற்கான 'டாப் ரேங்கர்ஸ் எக்ஸலன்ஸ்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
டில்லியில் நடந்த 24வது தேசிய மேலாண்மை உச்சி மாநாட்டில், 'டாப் ரேங்கர்ஸ் மேனேஜ்மென்ட் கிளப்' அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில், மேலாண்மை துறையில் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரங்களில் ஒன்றாக விளங்கும் 'டாப் ரேங்கர்ஸ் எக்ஸலன்ஸ்' விருது, என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவரும், ஏர் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஷ்வனி லோஹானி வழங்கினார். டில்லி நிர்வாக கழகத்தின் சேர்மன் வி.எம்.பன்சால், டாப் ரேங்கர்ஸ் மேனேஜ்மென்ட் கிளப் தலைவர்வி.எஸ்.கே.சூட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பணிக்காலத்தில், மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார்.
மேலும், என்.எல்.சி.,நிறுவனத்தின் சேர்மனாக பணியாற்றி வரும் தற்போதைய காலகட்டத்தில், இந்நிறுவனத்தை வலிமை மிக்கதாகவும், எரிசக்தித் துறையில் முன்னோடி நிறுவனமாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கியுள்ளார். அவரது தொலைநோக்கு பார்வை, நுண் திறன் மிகு உத்திகள், அறிவாண்மை, இடைவிடாத அர்ப்பணிப்புடன் கூடிய சேயல்பாடுகளை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.