/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் எண்ணெய் பிழியும் டான்காப் ஆலை... புதுப்பிக்கப்படுமா; பல கோடி ரூபாய் மதிப்பு இயந்திரங்கள் வீணாகிறது
/
விருதையில் எண்ணெய் பிழியும் டான்காப் ஆலை... புதுப்பிக்கப்படுமா; பல கோடி ரூபாய் மதிப்பு இயந்திரங்கள் வீணாகிறது
விருதையில் எண்ணெய் பிழியும் டான்காப் ஆலை... புதுப்பிக்கப்படுமா; பல கோடி ரூபாய் மதிப்பு இயந்திரங்கள் வீணாகிறது
விருதையில் எண்ணெய் பிழியும் டான்காப் ஆலை... புதுப்பிக்கப்படுமா; பல கோடி ரூபாய் மதிப்பு இயந்திரங்கள் வீணாகிறது
ADDED : செப் 11, 2024 01:53 AM

விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. வேர்க்கடலை, எள், மக்காச்சோளம், உளுந்து, வாழை, பூக்கள், காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள மார்க்கெட் கமிட்டிக்கு கடலுார் மட்டுமல்லாது பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளும் விளைபொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.
கடந்த 1982ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., மூலம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில், 10 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை (டான்காப்) துவங்கப்பட்டது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆலையின் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்தனர்.
இங்கு சூரியகாந்தி விதையில் இருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்டு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பின் சூரியகாந்தி சாகுபடி பரப்பளவு குறைந்ததால், அதன் விதைகள் சரிவர கிடைக்காமல் ஆலையின் செயல்பாடு குறைந்தது. இதனால் நான்கு ஆண்டுகள் மட்டுமே சூரியகாந்தி விதைகள் பிழியப்பட்ட நிலையில், அதன்பின் வேர்க்கடலை எண்ணெய் பிழியும் ஆலையாக செயல்பட்டது.
அதுவும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின், 25 ஆண்டுகளுக்கு மேலாக டான்காப் ஆலை மூடப்பட்டு, இயந்திரங்கள் அனைத்தும் பயன்பாடின்றி துருபிடித்து பாழாகி வருகிறது. இதனால் இன்றைய சந்தை மதிப்பில் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பாழாகியது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் தலைமைச் செயலகம் வரை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாறாக, கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை எடுத்து வந்து சேமித்து வைக்கும் தற்காலிக கிடங்காக மாற்றப்பட்டது.
இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாறாக ஆலையை புதுப்பித்து வேர்க்கடலை, எள் வித்துக்களை பிழிந்து நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பிழிந்து தரும் ஆலையாக மாற்றினால் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயனடைவர். மேலும் மாவட்டத்தில் வேர்க்கடலை, எள் சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல் கூறுகையில், 'சுத்தமான சமையல் எண்ணெய் கிடைப்பது இல்லை. எனவே, டான்காப் ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, வேர்க்கடலை, எள் வித்துக்களை பிழியும் ஆலையாக மாற்றலாம். அப்போது, இவ்விரண்டு பயிர்களின் சாகுபடி பரப்பளவு மாவட்டத்தில் அதிகரிக்கும்.
எனவே, பாழாகும் டான்காப் ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் விவசாய பரப்பளவு அதிகரிக்கிறது. அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொது மக்களுக்கு சுத்தமான எண்ணெயும் கிடைக்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து, ஆலையை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.