/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்த தடை
/
மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்த தடை
ADDED : மே 05, 2024 04:37 AM

பண்ருட்டி : மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விழா நடத்த தாசில்தார் தடை விதித்தார்.
பண்ருட்டி அடுத்த மேலிருப்பு முத்தாலம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 7 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்பகுதியில் இரு தரப்பு பிரச்னை தொடர்பாக திருவிழா நடத்த சென்னை ஐகோர்டில் ஒரு தரப்பினர் தடை வாங்கினர். இந்நிலையில், இரு தரப்பினரிடையே பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்த் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். தினகரன் தலைமையில் 10 பேர் ஒரு தரப்பாகவும்; முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் மற்றொரு தரப்பினரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முதல் நாள் திருவிழா கொடிமரம், கங்கை நீர் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என தினகரன் தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு, அனைத்து செலவும் பொது செலவாக செய்திட வேண்டும் என ராதாகிருஷ்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.
எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தினகரன் தரப்பினர் கூறியதால், பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் திருவிழா நடத்தக் கூடாது என தாசில்தார் தடை விதித்தார்.