ADDED : செப் 08, 2026 08:14 PM
விருத்தாசலம்: தீவளூர் மக்கள் இலவச மனைப் பட்டாவுக்கான இடத்தை அளந்து தர கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெண்ணாடம் அடுத்த தீவளூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடி குறவர் சமூக மக்கள், பழங்குடி மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நேற்று காலை 11:30 மணியளவில், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, பழங்குடி குறவர் சமூக மக்களுக்கு தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த 2025ம் ஆண்டில், தாழநல்லுார் கிராமத்தில் 256ஏ பகுதியில் மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அதிகாரிகள் அளந்து காட்டவில்லை.
பலமுறை மனு கொடுத்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., வெங்கடேசனிடம், கிராம மக்கள் சார்பில் மனு தரப்பட்டது. இது தொடர்பாக, இடத்தை அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.
அப்போது, மாவட்ட துணை செயலாளர் அம்சவள்ளி, மா.கம்யூ., வட்ட செயலாளர்கள் அன்பழகன், கலைச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் மாயவேல், கிளை செயலாளர்கள் செல்வம், கருப்பன் உடனிருந்தனர்.
