மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் உறுதி
மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் உறுதி
ADDED : ஏப் 07, 2024 05:24 AM

காரைக்கால் : 'மத்திய அரசிடம் பேசி மாநில வளர்ச்சிக்கு பல திட்டங்கள் கொண்டு வருவேன்' என, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் காரைக்காலில் நடந்தது. பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர் திருமுருகன் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம், மாநில துணை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., யாக இருந்து ஒன்றையும் சாதிக்கவில்லை. நான் லோக்சபாவுக்கு சென்றால், பிரதமரின் அனைத்து நலத்திட்டங்களையும், தடையின்றி நிறைவேற்றுவேன். மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் கொண்டு வருவேன்.
புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். மீனவ மக்களுக்கு உணவு பதப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு, காரைக்கால் மாவட்ட மக்கள் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ் பெற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 8, 9ம் தேதிகளில் முதல்வர் தலைமையில் காரைக்காலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் இருதினங்கள் பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கூட்டத்தில், ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற பாடுபட வேண்டும் என, தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
