/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் போதை வாலிபர் அடாவடி
/
பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் போதை வாலிபர் அடாவடி
ADDED : ஏப் 27, 2024 01:40 AM

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து கடலுாருக்கு, தடம் எண்: 219 அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு புறப்பட்டது. சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார், 32, பஸ்சை ஓட்டினார். விருத்தாசலம் அடுத்த முடப்புளி அருள்ராஜ், 25, கண்டக்டராக பணியில் இருந்தார். இருவரும் தற்காலிக பணியாளர்கள்.
பஸ், கடலுார் சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே சென்றபோது, வாலிபர் ஒருவர் சாலையின் குறுக்கே பஸ்சை வழிமறித்து நின்றார்.
ஒதுங்கி நிற்குமாறு கூறியதால் ஆத்திரமடைந்த அவர், கண்டக்டர் அருள்ராஜை சரமாரியாக தாக்கினார். பலர் தடுத்த போதும், அவரின் தாக்குதல் தொடர்ந்தது.
காயமடைந்த அருள்ராஜ் பஸ்சின் முன் அமர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதையேற்று, பஸ் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, மாலை 4:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
விசாரணையில், தகராறில் ஈடுபட்ட வாலிபர், விருத்தாசலம் கஸ்பா காலனியை சேர்ந்த தனுஷ், 25, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தனுஷ் அதிகமாக குடித்து, போதையில் இருந்தது தெரிந்தது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

