ADDED : மே 07, 2026 04:51 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடைமேடையை வியாபாரிகள் ஆக்கிரமித்ததால், பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருப்பூர், சேலம், கடலுார், விழுப்புரம் உட்பட பல்வேறு பெரு நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி உள்ளது.
அதுபோல், விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் 1, 2ல் இருந்து குக்கிராமங்களுக்கும் பஸ்கள் இயங்குகின்றன.
தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் செல்வதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர்.
இங்கு பயணிகள் நலன் கருதி, நகராட்சி நிர்வாகத்தால் 40க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல், கடைகளின் முகப்பில் உள்ள நடைமேடை வழியாக பயணிகள் சென்று வருகின்றனர்.
ஆனால், கடைகளின் முகப்பு பகுதியை வியாபாரிகள் ஆக்கிரமித்து பொருட்கள், பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால் பஸ்சுக்கு வந்து செல்லும் பெண்கள், முதியோர் நிற்க கூட இடமின்றி கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலைய நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
