ADDED : ஜூலை 24, 2026 08:01 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நுண்ணீர் பாசனம் அமைத்திட ஆண்டு இலக்காக 1020 எக்டருக்கு 6.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவிலான பயிர்களுக்கு நீர் பாய்ச்சலாம்.
முறையான களை மேலாண்மை மற்றும் உர மேலாண்மை மூலம் பயிரின் மகசூல் அதிகரிக்கும். இத்திட்டத்தில் சிறு மற்றும் குறுவிவசாயிகளுக்கு 2 எக்டர் வரை 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அதிகபட்சமாக 5 எக்டர் வரை அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது தாங்களாகவே நுண்ணீர் பாசன இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளம் மூலம் தங்களுடைய வயலில் சொட்டு நீர் அமைக்கவிருக்கும் தேவையான பரப்பிற்கு மானிய கணக்கீட்டை பாசன இடைவெளி வசதியுடன் அறிந்து விண்ணப்பிக்கலாம். மேலும், சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து 3 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக்கொண்டு பயன்பெறலாம். விவசாயிகள் நுண்ணீர் பாசன நிறுவனங்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது. கடலுார் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு நுண்ணீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
