மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு கலெக்டர் ‘டோஸ்’
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு கலெக்டர் ‘டோஸ்’
ADDED : ஜூலை 11, 2026 05:20 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்களுக்கு கலெக்டர் ‘டோஸ்’ விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சேலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா சீனியர் செகன்டரி பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் நான்கு நாட்களுக்கு பயிற்சி வகுப்பு துவங்கியது.
இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதாக வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
இதனால், பயிற்சியை புறக்கணித்து ஆசிரியர்கள் புறப்பட்டனர். இந்நிலையில், பயிற்சியை புறக்கணித்த 2 கண்காணிப்பாளர்கள், 63 கணக்கெடுப்பாளர்களான ஆசிரியர்களும் தன்னிலை விளக்கம் தர வேண்டும். மேலும், இன்று (நேற்று) பயிற்சியில் பங்கேற்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விருத்தாசலம் டி.இ.ஓ.,விடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பயிற்சிக்கு சென்றனர்.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி, உடல் நலக்குறைபாடுடைய ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டாம். மேலும், அரசு பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டாம் என ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சி.இ.ஓ.,விடம் தெரிவித்தோம்.
அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஆனால், பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டுள்ளதாக கூறி, அனைவரும் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைப்பது தவறு. ஆசிரியர்களின் கோரிக்கைகளை கலெக்டர் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
