/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதிமுறைகளை மீறினால் சமையல் கூடத்திற்கு 'சீல்' : மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
/
விதிமுறைகளை மீறினால் சமையல் கூடத்திற்கு 'சீல்' : மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
விதிமுறைகளை மீறினால் சமையல் கூடத்திற்கு 'சீல்' : மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
விதிமுறைகளை மீறினால் சமையல் கூடத்திற்கு 'சீல்' : மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 13, 2024 05:25 AM
கடலுார்: சமையல் கலைஞர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் 'பாஸ்டாக்' பயிற்சியினை முடித்திருக்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
குறிஞ்சிப்பாடி வட்டார பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் புலியூர் காட்டுசாகையைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் இறந்தனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்று உணவு, தண்ணீர் ஆய்வு செய்து மாதிரி எடுத்து சென்றனர். முதல் கட்ட விசாரணையில் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமையல் கலைஞர்கள் பயிற்சி இல்லாமல் தம் விருப்பம்போல் சமையல் செய்து கொடுப்பதால்தான் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது. எனவே சமையல் செய்பவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உணவில் எந்தெந்த பொருட்கள் சேர்க்கலாம், எந்தெந்த பொருட்கள் சேர்க்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தகுந்த பயிற்சி அளித்தும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பயிற்சி ஏற்கனவே சத்துணவு சமையலர் மற்றும் ஊட்டச்சத்து ஊழியர்ளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்புத்துறையால் வழங்கப்படும் சான்றிதழ் இருந்தால் மட்டுமே சமையல் செய்ய முடியும்.
திருமணம் மண்டபம் வைத்திருப்போர்கள் சமையல் கூடம் வைத்திருப்பதால் அவர்களும் கண்டிப்பாக சான்றிதழ் பெற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் உரிமத்தை திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் கண்டிப்பாக பெறப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் 'பாஸ்டாக்' பயிற்சியினை சமையல் கலைஞர்கள் கண்டிப்பாக பெற்று அதன் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
திருமண மண்டப உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் 'பாஸ்டாக்' சான்றிதழ் பெற்றிடாத சமையல் கலைஞர்களை சமைக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு திருமண மண்டப உரிமையாளர்களே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்பாராதவிதமாக ஏற்படும் நிகழ்வுகளுக்கு உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு காலதாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும். அறிவுரைகளை மீறி செயல்படும் திருமண மண்டபங்களின் சமையல் அறைக்கு முன்னறிவிப்பின்றி சீல் வைக்கவும், சமையல் கலைஞர்களின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.