சுடுகாட்டு பிரச்னை, தனி நபர் ஆக்ரமிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
சுடுகாட்டு பிரச்னை, தனி நபர் ஆக்ரமிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 24, 2026 09:22 PM

புவனகிரி: மேலக்கீரப்பாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
மேலக்கீரப்பாளையத்தில் பட்டியல் இன மக்களுக்கு வழங்கிய இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வழங்கவேண்டும்; பூதங்குடியில் சுடுகாட்டு சாலைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கீரப்பாளையம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் மற்றும் சவப்பாடையுடன் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, நேற்று காலை, 9:45 போராட்டத்தின் பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் தலைமையில், வாஞ்சிநாதன், முருகன் ஆகியோர் அப்பகுதி மக்கள் முன்னிலையில் திரண்டனர்.
போராட்டக்காரர்களிடம் டி.எஸ்.பி., பிரதீப் பேச்சுவர்த்தை நடத்தினார். மதியம், 12:15 மணிக்கு சிதம்பரம் தனி தாசில்தார் முகம்மதுஅசைன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களின் உத்தரவாதத்தின் பேரில் மதியம் 1:30 மணிக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.
அதில் பூதங்குடி சுடுகாட்டு சாலை குறித்து வரும், 28 ம் தேதி சிதம்பரம் சப் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதுடன், மேலக்கீரப்பாளையத்தில், பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய இடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுவதை முறைப்படி விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் பின் மதியம் 2:00 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
