அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் நெருக்கடி: ஊராட்சிகளில் வரி வசூல் பணியில் தொய்வால்...தவிப்பு
அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் நெருக்கடி: ஊராட்சிகளில் வரி வசூல் பணியில் தொய்வால்...தவிப்பு
UPDATED : ஜூலை 27, 2026 03:28 AM
ADDED : ஜூலை 26, 2026 04:00 PM

மந்தாரக்குப்பம்: ஊராட்சிகளில் வரி வசூல் பணிகளில் தொய்வு, நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளதால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் நெருக்கடி ஏற்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் 683 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடந்து வருகிறது. மத்திய நிதிக் குழு மானியம் மூலம் ஊராட்சியின் மக்கள் தொகை, பரப்பளவு, உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வழங்கப்படும் நிதி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் செலவினங்களுக்கு போதுமானதாக இல்லாத சூழ்நிலை உள்ளது. மக்கள் பிரிதிநிதிகள் இருந்தால் மட்டுமே ஊராட்சிகளுக்கு மத்திய அரசு குழு மானியம் உள்ளிட்ட நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது உள்ளாட்சி பிரிதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 2025 ல் நிறைவடைந்து உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் கடந்த சில மாதங்களாக மத்திய நிதி குழு மானிய நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே ஊராட்சிகளில் சொந்த வருவாய் பெருமளவில் குறைந்து வருகின்றது.
இதனால் அடிப்படை வசதிகள் சாலை குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.பெரிய ஊராட்சிகளில் தொழில் நிறுவனங்கள் வரி வசூலால் ஒரளவு நிதி நெருக்கடியை சமாளித்தாலும் சிறு ஊராட்சிகளில் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
மாநில அரசு வழங்கி வந்த நிதி குழு மானியமும் குறைக்கப்பட்டு உள்ளதால் தெரு விளக்கு,குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மின்மோட்டார்கள் பழுதடைதல் மற்றும் குடிநீர்க் குழாய் உடைப்புகளைச் சரிசெய்ய நிதியின்றி உள்ளதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வரை மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கிராமங்களில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, கடை உரிமம் வரி ஆகியவற்றை கொண்டு ஊராட்சி செலவுகளை ஈடு செய்து வந்தனர். தற்போது ஊராட்சிகளில் வரி வசூலில் ஊழியர்கள் சிறப்பு கவனம் செலுத்தினாலும் பல ஊராட்சிகளில் 50 சதவீதம் கூட வரி வசூல் ஆகாத சூழ்நிலை உள்ளது.
வரி வசூலில் தொடர் முயற்சி செய்தாலும் வரி வசூலை முடிக்க முடியாமல் பணியாளர்கள் திணறுகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் வரி வசூல் நிலுவையாக ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை இருப்பதால் பணியாளர்களின் சம்பளம், குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.உயர் அதிகாரிகள் வரி வசூலை விரைவாக முடிக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்தினை தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ஊராட்சிகளில் பொது மக்களின் வரி பங்களிப்பு மிகவும் முக்கியமனதாக ஒன்றாகும். வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி , கடை உரிமம் வரி தொகையை வசூலிக்க செல்லும் போது ஊராட்சி ஊழியர்களிடம் வரி செலுத்துவதை பொதுமக்கள் தட்டி கழித்து வருகின்றனர்.வரி வசூல் தொகையை வசூலிக்க ஊராட்சி பணியாளர்கள் பலமுறை சென்றாலும் வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது. நாங்கள் ஆன் லைன் மூலம் பணம் செலுத்தி கொள்கிறோம் என ஊழியர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரிரு நாள் கழித்து மீண்டும் சென்று வரிபணம் கேட்டால் பல்வேறு காரணங்களை தெரிவித்து வரி செலுத்துவதை பொதுமக்கள் தட்டிக் கழித்து வருகின்றனர்.அரசு மூலம் பல்வேறு சலுகைகள் பொது மக்களுக்கு கிடைப்பதால் அதே மனநிலையில் வரி வசூலையும் செலுத்தாமல் தவிர்த்து வருகின்றனர். பொதுமக்கள் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை குறிப்பிட்ட நாளில் செலுத்துவதை அரசு கட்டாயமாக வேண்டும்.
வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நெருக்கடிகளால் வரி வசூலை ஒவ்வொரு ஆண்டும் முழுமைப்படுத்த முடியும். வரி வசூல் நிலுவை தொடர்வதால் ஊராட்சிகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியமால் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.
