/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சம்
/
கொள்ளிடக்கரை கிராமங்களில் முதலை அச்சம்
ADDED : மார் 05, 2025 05:17 AM

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு மற்றும் பழைய கொள்ளிடத்தில் தஞ்சமடைந்த முதலைகள், இனப்பெருக்கம் காரணமாக ஆற்றங்கரையோர கிராமப்பகுதிகளில் உள்ள குளம், வாய்க்கால்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சிதம்பரம் கிராமங்களில் அடிக்கடி முதலைகள் புகுவதால், கிராம மக்கள் அச்சத்தில் துாக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதலைகள், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாய்க்கால் குளங்களில் கரைகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை மட்டுமே கடித்து வந்த நிலையில், படிப்படியாக மனிதர்களையும் கடிக்க துவங்கியது.
அந்த வகையில், இதுவரையில், நீர் நிலைகளில் குளிக்க சென்றவர்கள் ஆற்றை கடப்பவர்கள் முதலை வாயில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக, சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி முதலைகள் புகுவதும், வனத்துறையினர் சென்று முதலகளை பிடிப்பதும், சில இடங்களில் பொதுமக்களே பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
கடந்த வாரத்தில் மட்டும், சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் நள்ளிரவு நேரத்தில் ஒருவரது வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த மெகா சைஸ் முதலை புகுந்தது, குமராட்சியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பொதுமக்களே பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தது, நேற்று முன்தினம் வக்காரமாரி குளத்தில் இரு முதலைகளை பிடிபட்டது என, 5 க்கும் மேற்பட்ட முதலைகள் பிடிபட்டுள்ளது.
சிதம்பரம் பகுதிகளில் முதலைகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
காண்பதற்கு அரிதான, முதலைகளை, சிதம்பரம் பகுதியில் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. முதலைகள் சாலைகளில் ஒய்யார நடை போடும் வீடியோ, வெயிலுக்கு இதமாக சாலையில் ஓய்வெடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், நீர்நிலைகள் மற்றும் புதர்களில் மறைந்து வாழ்ந்து வந்த முதலைகள், தொடர்ந்து வெளியேறி வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமங்களின் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால், மக்கள் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.
முதலை பண்ணை தேவை
கடந்த 20 ஆண்டுகளாக சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை இருந்து வரும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., என இரு ஆட்சியிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த ஆட்சியில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். ஆனால், அரசு அதற்கும் செவி சாய்க்கவில்லை.
கடந்த ஒரு ஆண்டாக இப்பகுதியில் முதலைகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், முதலை பண்ணை அமைத்து, முதலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சுற்றுலா தளமான சிதம்பரத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு முதலை பண்ணை அமைக்கப்பட்டால், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வந்து பார்வையிடுவர். இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
அமைச்சர் கவனிப்பாரா
கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அமைச்சர், சிதம்பரத்தில் அனைத்து குளங்களையும் இணைக்கும் திட்டம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல திட்டங்கள் அவரது ஆலோசனைப்படி செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், சிதம்பரம் பகுதியில் முதலைகளால் ஏற்படும் மனித உயிழிப்புகளை தடுக்கும் வகையில், முதலை பண்ணை அமைக்க, அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.