ADDED : மே 04, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பாரதி சாலையில் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. சில்வர் பீச்சிற்கு அடுத்தப்படி மாநகர மக்களின் பொழுது போக்கு இடமாக உள்ளது.
பூங்காவிற்கு தினமும் சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஏராளமானோர் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.
சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் ஒரு பகுதி இருக்கை உடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறிய ராட்டினம் உடையும் நிலையில் உள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். செயற்கை நீருற்று வீணாகி காட்சிப் பொருளாக உள்ளது.
கோடை விடுமுறை முடிவதற்குள் விளையாட்டு உபகரணங்களை சரி செய்து, சிறுவர்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.