/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ADDED : செப் 09, 2024 05:21 AM
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்கள் கிரிவலம் வரும் வகையில் ஏற்பாடு செய்து தர அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷம், கிருத்திகை, அஷ்டமி, பவுர்ணமி என மாதாந்திர பூஜைகளும், மாசி மகம், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் உட்பட ஆண்டுதோறும் திருவிழாக்களும் விமர்சையாக நடத்தப்படுறுகிறது. தினசரி ஏராளமானோர் தரிசனம் செய்கின்றனர்.
பழமை வாய்ந்த இக்கோவிலை சுற்றி அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதுபோல், ஓட்டல்கள், காய்கறி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பெருவணிக நிறுவனங்களும், பங்க் கடைகளும் உள்ளன. இவற்றுக்கு வருவோரின் வாகனங்கள் ஆங்காங்கே சாலையின் குறுக்கே நிறுத்தி செல்வதால் பக்தர்கள் சிரமமடைகின்றனர்.
மேலும், விருத்தாசலம் - வேப்பூர் மார்க்க வாகனங்கள், கோவிலை சுற்றியுள்ள தெற்கு கோபுர வீதி, மேற்கு கோபுர வீதி, வடக்கு கோபுர வீதி, கிழக்கு கோபுர (சன்னதி வீதி) வீதி வழியாக செல்கின்றன. இதனால் திருவிழா காலங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவது தொடர்கிறது. குறிப்பாக திருவிழா காலங்களில் குறுகலான சாலையில் தேரோட்டம் நடத்துவது சிரமமாக இருந்தது.
இந்நிலையில், கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட போது, கோவிலை சுற்றியுள்ள தெற்கு கோபுர வீதி, மேற்கு கோபுர வீதி சாலைகளை அகலப்படுத்தி, பிளாட்பார்ம் போடப்பட்டது. அதுபோல், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 1.25 கோடியில் வடக்கு மற்றும் கிழக்கு கோபுர சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.
இதனால் விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியும் பக்தர்கள் வசதிக்காக சாலைகள் விரிவாக்கம் செய்தும், கோவிலை சுற்றி வந்து தரிசனம் செய்ய முடியாத நிலையே தொடர்கிறது.
பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் பலரும் இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் கோவிலை சுற்றி வருகின்றனர்.
சாலைகளை விரிவாக்கம் செய்தும் ஆங்காங்கே வணிக நிறுவனங்களும், டாடா ஏஸ் வேன்கள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாலையின் குறுக்கே செல்கின்றனர். இதனால் வேப்பூர் மார்க்கமாக அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி பக்தர்கள் பலியாகும் அபாயம் உள்ளது.
எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.