ADDED : ஜூலை 23, 2026 04:31 PM
மந்தாரக்குப்பம்: கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் டெங்கு கொசு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஎஸ்’ கொசுக்களால் ஆண்டு முழுவதும் பரவலாக பாதிப்பு இருந்தாலும், ஜூன் மாதத்திற்கு பிறகு சற்று அதிகரிக்க தொடங்குகிறது.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் தொட்டிகளில் உள்ள கொசு புழுக்களை அகற்றவும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்களில் கொசு புழுக்கள் வளர வாய்ப்பு உள்ளதால் அதை அப்புறப்படுத்த வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் அருகில் நீர் தேங்காதவாறு துாய்மையாக வைத்து கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்கும் விதமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
