/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 14, 2024 07:18 AM
கடலுார்: நீர்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
மணிமுக்தாறு மற்றும் கோமுகி ஆறு நல்லுார் கிராமத்தின் அருகில் கலப்பதால் அதிகப்படியான வெள்ள நீர் மணிமுக்தாற்றிற்கு உட்பட்டு செல்லாமல் மணிமுக்தாற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ள நீர் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே மணிமுக்தாற்றின் கரையோர கிராமங்களில் விவசாய நிலங்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேப்பூர் வட்டம், இலங்கியனுார் கிராமத்தில் ரயில் பாதையின் மேற்புறம் மணிமுத்தாற்றின் இடது கரையில் தடுப்புச் சுவர் அமைப்பது, சரிவுச்சுவர் மற்றும் மணிமுத்தாற்றின் கரையை பலப்படுத்துவது குறித்தும் மற்றும் நல்லுார் கிராமத்தில் மணிமுக்தாறு மற்றும் கோமுகி ஆறு ஒன்று சேருமிடத்தில் வெள்ளத் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, மணிமுக்தாறு மற்றும் கோமதி ஆற்றின் இரு கரைகளிலும் கடின மண் கொண்டு கரையை பலப்படுத்தும் பணி மற்றும் விவசாய நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் வடிய நீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செய்தார்.
திட்டக்குடி நகராட்சியில் 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டடட பணி, புதிய பஸ் நிலையத்தில் 48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகள், 3.12 கோடியில் கட்டப்படும் காய்கறி மார்க்கெட் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 5 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டடத்தையும் ஆய்வு செய்தார்.
ஆய்வில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., செயற்பொறியாளர் நீர்வளத்துறை அருணகிரி, திட்டக்குடி நகராட்சி ஆணையாளர் மல்லிகா உட்பட பலர் உடனிருந்தனர்.