/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
பண்ருட்டியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 16, 2024 11:27 PM

கடலுார்: பண்ருட்டி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சேமக்கோட்டை ஊராட்சி, வையாபுரிபட்டினம் பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் வருகைப்பதிவேடு உள்ளிட்ட அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 23.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுமான பணிகளையும், குப்பை தரம் பிரித்தல் கூடம் மற்றும் மக்கும் குப்பை, மக்காகுப்பை உரக்குழிகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார்.
தொடர்ந்து எலந்தம்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் துார்வாரும் பணிகளையும், கொளப்பாக்கம் ஊராட்சியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப் பணியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாளிகம்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்நிலை பள்ளிக்குச் செல்லும் சாலையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.