/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுார் கதவணை திட்டம் அறிவிக்காதது ஏமாற்றம்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு
/
வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுார் கதவணை திட்டம் அறிவிக்காதது ஏமாற்றம்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு
வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுார் கதவணை திட்டம் அறிவிக்காதது ஏமாற்றம்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு
வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுார் கதவணை திட்டம் அறிவிக்காதது ஏமாற்றம்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு
ADDED : மார் 01, 2025 06:55 AM

கடலுார்; வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுார் கதவணை கட்டும் திட்டத்தை முதல்வர் அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாக, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் பேசியதாவது;
மாதவன்: புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒதுக்கிய 498 கோடி ரூபாய் நிதியை விரைந்து வழங்க வேண்டும். சிதம்பரம், புவனகிரி பகுதியில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை 15 நாட்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையடிகுப்பம் பெத்தான்குப்பம் கிராமத்தில் தோல் தொழிற்சாலை வரும் என கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சிப்காட் ஈச்சங்காடு பகுதிக்கு பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரவீந்திரன்: தமிழக முதல்வர் வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுார் கதவணை கட்டுவதற்கான திட்டம் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி விவசாயிகளிடையே இருந்தது.
இந்த அறிவிப்பு இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க உடனடியாக வெள்ளாற்று குறுக்கே கதவணை அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான நிதியை பெறுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கே உள்ள மாவட்டங்கள், மாநிலங்கள் மூலம் கிடைக்கக்கூடிய மழை நீரை முழுமையாக பூமிக்கடியில் செறிவூட்டல் முறையில் சேகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
முருகானந்தன்: ஸ்ரீமுஷ்ணம் வேளாண் விரிவாக்க மையத்தில் விதை நெல் இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் விதை நெல்லில் கலப்படம் வருவதை தடுக்க வேண்டும். இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
பாண்டியன்: வையூர் பகுதியில் பாசன வாய்க்கால்களை துார்வார வேண்டும். அங்குள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.
மதியழகன்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறவிக்க வேண்டும்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மலையடிகுப்பம் பெத்தான்குப்பம் கிராமத்தில் தோல் தொழிற்சாலை வரவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.