ADDED : மே 30, 2024 05:48 AM
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்த தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து பேரவை தலைவர் ஜெமினி ராதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பல நூறாண்டுக்கு முன், சைவம்- வைணவ பாகுபாட்டால் மதுரை சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
பின்னர் சைவ, வைணவ சமயங்களில், ஒற்றுமை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் ஒரே விழாவாக மாற்றி சித்திரை திருவிழா, இன்று வரை நடைபெற்று வருகிறது. எனவே மதுரை சித்திரை திருவிழா போன்று, சைவ வைணவ பாகுபாட்டை மறந்து ,பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களுக்கு, நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.