/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு புலம்பலில் ஆசிரியர்கள்
/
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு புலம்பலில் ஆசிரியர்கள்
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு புலம்பலில் ஆசிரியர்கள்
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு புலம்பலில் ஆசிரியர்கள்
ADDED : ஆக 28, 2024 03:58 AM
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 348 ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 38 பேர் என, மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
மாவட்டம் வாரியாக, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு தகுதியான ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்புகிறது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் விருதும், பதக்கமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும்.
கடலுார் மாவட்டத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பத்து ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்காக நடப்பாண்டில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதில், 20பேர் இறுதி செய்யப்பட்டு அதிலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விண்ணப்பித்த ஆசிரியர்கள் பலரும், அரசியல் பலம் மிக்கவர்களின் ஆதரவை, பெறுவதில் தீவிரமாக இறங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல், இடைநிற்றலை குறைத்தல், தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தல் போன்ற பணிகளுக்காக அக்கறையோடு செயல்படும் ஆசிரியர்களை புறக்கணிக்காமல், தகுதியானவர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.