ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த... எதிர்ப்பார்ப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த... எதிர்ப்பார்ப்பு
UPDATED : ஜூன் 28, 2026 11:22 PM
ADDED : ஜூன் 28, 2026 11:02 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையத்தினை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றி சி.என்.பாளையம், குமளங்குளம், விலங்கல்பட்டு, சிலம்பி நாதன்பேட்டை, கொடுக்கன்பாளையம், பாலுார், பல்லவராயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் நடுவீரப்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம் கடந்த 2009 ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையமாக மாற்றப்பட்டது.
இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதாரநிலையத்தின் கீழ் வெள்ளக்கரை, மதலப்பட்டு, திருவந்திபுரம், துாக்கணாம்பாக்கம்,காரைக்காடு ஆகிய சுகாதாரநிலையங்கள் இயங்கி வருகின்றன.
இந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தில் தினமும் 500 க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதாரநிலையத்தில், 20 படுக்கைகள் கொண்ட பிரவச வார்டு உள்ளது. இங்கு பல கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. சித்தா, பல், கண் உள்ளிட்ட சிறப்பு பிரிவில்,
சிகிச்சைகள் தினமும் பார்க்கப்பட்டு வருகின்றன.
மேலும் ரத்தப்பரிசோதனைகள், ஈ.சி.ஜி., எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இங்கு சித்தா மருத்துவத்திற்கான தனி கட்டடம்,இரத்த பரிசோதனை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கான தனி கட்டடம்,பிரசவ வார்டு கட்டடம் என தனித்தனி கட்டடங்கள் உள்ளன.
தற்போது இட பற்றாக்குறையால் பொதுமக்களின் கோரிக்கையின் பேரில், 15 வது நிதிக்குழு மானிய நிதியில், ரூ.1.5 கோடிமதிப்பில், புதிய கூடுதல் கட்டட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இங்கு இப்பகுதியில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்து வருகின்றனர்.
இங்கிருந்து கடலுாருக்கு, 20 கிலோமீட்டர் துாரம் செல்வதற்குள், பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை படுமோசமாகி, உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இதனால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தினை தரம் உயர்த்தி ஸ்கேன்,படுக்கை வசதி,கூடுதல் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆகியோரை நியமித்து, மருத்துவமனையமாக தரம் உயர்த்த வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தின் பின்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம், பல ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதனால் மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் கூடுதல் கட்டடம் கட்ட இடப்பிரச்னை இருக்காது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
