/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உழவர் சந்தையில் ஆய்வு
/
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உழவர் சந்தையில் ஆய்வு
ADDED : மே 12, 2024 05:43 AM

கடலுார்: கடலுார் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பழங்களை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று காலை கடலுார் உழவர் சந்தை, குறிஞ்சிப்பாடி கடைத்தெரு, வடலுார் வார சந்தை, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு வாழைப்பழ குடோன்களிலும் மாம்பழ குடோன்களிலும் நடத்தப்பட்டது.
வாழைப் பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா, எத்திலின் ஸ்பிரே அடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது உழவர் சந்தை அருகில் வாழைப்பழங்களை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்திய எத்திலின் திரவம் ஒரு லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் மாம்பழம் மற்றும் வாழைப்பழம் குடோன்கள் வைத்திருப்பவர்கள் கார்பைடு கல் மற்றும் எத்திலின் ஸ்பிரே பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்க கூடாது. எத்திலின் பவுடரை முறையாக பயன்படுத்தி அதனுடைய வாயு வடிவில் தான் அதை பயன்படுத்த வேண்டும். அதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர்.