ADDED : ஆக 29, 2024 07:38 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பூங்கொடி, கல்வியோடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாணவிகளை அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி அளித்து போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேல்பட்டாம்பாக்கத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட பாரதியார் தின மற்றும் சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில், இப்பள்ளி மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், செஸ் போட்டிகளில் ரோஷினி, ராஜலட்சுமியும், சிலம்பம் போட்டியில் லோகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார்.
தலைமையாசிரியை பூங்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் ஆனந்தராஜ், கவிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

