/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு: ரூ.80 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி 'அம்போ'
/
மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு: ரூ.80 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி 'அம்போ'
மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு: ரூ.80 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி 'அம்போ'
மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு: ரூ.80 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி 'அம்போ'
ADDED : மே 30, 2024 05:22 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் புண்ணிய நதி என்று அழைக்கப்படும் மணிமுக்தா ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், மினி கூவமாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம் பிரதான நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் கோவில்கள் உள்ளன. அதேபோல், புண்ணிய நதி என்றழைக்கப்படும் மணிமுக்தா ஆறு நகரத்தின் நடுவே ஓடுவது முக்கிய சிறப்பம்சமாகும்.
விருத்தாசலம் நகரத்திற்குட்பட்ட மணலுார் - பூதாமூர் வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் நகரத்தின் அனைத்து கழிவு நீர் கால்வாய்களும் மணிமுக்தா ஆற்றில் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் எப்போதும் ஆற்றில் மழை நீர் ஓடுவதுபோல் கழிவுநீர் ஓடுகிறது. விருத்தகிரீஸ்வரர் கோவில் விழா, பொங்கல் திருவிழா, மாசி மகம், ஆடி பெருக்கு உள்ளிட்ட திருவிழா காலங்களில் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் கூடுவர்.
சபரிமலைக்கு மாலை போடும் ஐயப்ப பக்தர்கள், பங்குனி மாதத்தில் அலகு மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் மணிமுக்தா ஆற்றில் நீராடி செல்வது வழக்கம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே மழை காலத்தை தவிர்த்து மற்ற நாட்களில் ஆற்றில் கழிவுநீர் மட்டுமே ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கே கூச்சப்படுகின்றனர்.
மேலும், ஆற்றில் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுகள் கொட்டப்படுதால் பன்றிகள் அதிகளவில் சுற்றி திரிகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஆற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால், கரையோரம் உள்ள பொதுமக்கள் மினரல் வாட்டரை வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆற்றை ஒட்டியுள்ள சிறு வியாபாரிகள் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட மண் வளத்தை பாதிக்கக் கூடிய மக்காத கழிவுகளை ஆற்றில் கொட்டுகின்றனர். இறைச்சி கழிவுகளையும் சிலர் இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர்.
புண்ணிய நதியாக கருதப்படும் மணிமுக்தா ஆற்றில் குளித்தால் முக்தி அடையலாம் என்பது ஐதீகம். ஆனால், தற்போது இந்த ஆற்றை பார்க்கவே முடியாமல் மக்கள் முகம் சுழிக்கும் நிலையில் உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் அப்போதைய எம்.எல்.ஏ., கலைச்செல்வன் மணிமுக்தாற்றை துாய்மை படுத்தம் பணியை மேற்கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திறகும் மேற்பட்ட தன்னார்வலர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
அதன்பின் யாரும் ஆற்றை கண்டுகொள்ளாததால் தற்போது, கூவம் நதி போல் காட்சி அளிக்கிறது. மணிமுக்தாற்றில் தேங்கியுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, கடந்த 2020ம் ஆண்டு மாவட்ட கனிம வள அறக்கட்டளை சார்பில், ரூ. 80 லட்சம் மதிப்பில், 17 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டதால், சுத்திகரிப்பு தொட்டிகளில் புதர் மண்டி கிடக்கிறது. எனவே, புண்ணிய நதியை துாய்மை படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகம் நகரத்தின் நலன் கருதி ஆற்றில் கழிவுநீரை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஆற்றின் புனித தன்மையையும், ஐதீகத்தையும், நிலத்தடி நீரையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.