ADDED : ஜூலை 24, 2026 11:03 PM
கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் இந்திய மாணவர் சார்பில் இரவு நேர காத்திருப்பு போராட்டம் நடந்தது.இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யூ., விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் ஆகியன சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக விடிய விடிய காத்திருப்பு போராடடம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்பேராட்டம் ஜவான்ஸ்பவன் அருகில் நேற்றிரவு 9:30 மணிக்கு துவங்கியது.
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சவுமியா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு கருப்பையன், மாநகர செயலாளர் அமர்நாத், ஜனநாயக மாதர் சங்கம் வாலண்டினா உட்பட பலர் பங்கேற்றனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 10:15 மணி வரை மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என, டி.எஸ்.பி. தமிழ் இனியன் கூறினார். இதனையேற்று மாணவர் அமைப்பினர் 10:15 மணிக்கு கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
