ADDED : ஜூன் 28, 2026 05:21 PM
விருத்தாசலம்: குறிஞ்சிப்பாடி அடுத்த வரதராஜன்பேட்டை கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், விளைநிலங்களை பாதுகாப்போம் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமினை, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் துவக்கி வைத்து, நிலங்களின் சத்துக்களுக்கு ஏற்றவாறு உர பரிந்துரை செய்ய வேண்டும். யூரியா மற்றும் டி.ஏ.பி., அதிகமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்தார்.
பேராசிரியர் கமலக்கண்ணன் உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் மற்றும் தொழு உரங்கள் பயன்பாடுகளை அதிகரிப்பதால் மண்ணில் பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் மேம்பாடு, மண்ணிற்கு உரமிடும் போது மண்வள அட்டையில் பரிந்துரைத்த உர பரிந்துரைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் வெங்கடேசன் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதில், வேளாண் அலுவலர்கள், கிராம விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
