/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை மகா அபிஷேகம்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை மகா அபிஷேகம்
ADDED : மார் 11, 2025 05:16 AM
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மாசி மாத மகா அபிஷேகம் நாளை 12ம் தேதி நடக்கிறது.
நடராஜர் கோவிலில், சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி என ஆண்டுக்கு, 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.
ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய 2 விழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனக சபையிலும் மகா அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாசி மாத மகா அபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் நாளை 12ம் தேதி மாலை 6:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
முன்னதாக, இன்று காலை 9:00 மணிக்கு லட்சார்ச்சனையும், 10:00 மணிக்கு மகா ருத்ர பாராயணமும், மதியம் 2:00 மணிக்கு யாகசாலையில் மகா ருத்ர ஜப ஹோமம், கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து, யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, மாலை 6:00 மணிக்கு மேல் கனகசபையில் மகா ருத்ரஜப மகா அபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.