ADDED : ஜூன் 05, 2026 07:00 PM

விருத்தாசலம்: கோ.பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் விரிவாக்கம் செய்திட அளவீடு பணிகள் துவங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருத்தாசலம் – சேலம் புறவழிச்சாலை, பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை இணையும், கோ.பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, கடந்த வாரம் ‘தினமலர்’ நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, கோ.பொன்னேரி ரவுண்டானாவில் தொடர் விபத்துகளை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும். ரவுண்டானாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவுபடுத்த வேண்டும்.
சாலை விரிவாகத்திற்கு இடிக்கப்பட்ட நிழற்குடையை மீண்டும் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து, கடந்த 2ம் தேதி கிராம மக்கள் மற்றும் தி.மு.க., – கம்யூ., – வி.சி., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் பிரேமலதா எம்.எல்.ஏ., பொன்னேரி ரவுண்டானாவை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விபரம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் மற்றும் நில அளவைத்துறையினர் இணைந்து, கோ.பொன்னேரி ரவுண்டானாவில் அளவீடு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து கடைகள் கட்டியது தெரிந்தது.
மேலும், தனிநபர்களுக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால், பிளாட்பார்ம் அமைத்து அலட்சியமாக செயல்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால், அளவீடு பணியை பார்வையிட்ட போராட்டக்குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.
அளவீடு தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
