/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சர் கார் மறிப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு
/
அமைச்சர் கார் மறிப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 20, 2024 04:26 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மற்றும் எம்.பி., கார்களை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிகாட்டில் ரூ.8.51 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனையும் மீறி, அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:30 மணிக்கு அமைச்சர் கணேசன், விஷ்ணுபிரசாத் ஆகியோர் திட்டக்குடியில் இருந்து கூடலுாருக்கு தனித்தனி காரில் புறப்பட்டனர். தர்மகுடிகாடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு அ.தி.மு.க., கவுன்சிலர் நவீன்ராஜ் தலைமையில் கவுன்சிலர்கள் சேதுராமன், கமல்ராஜ், ராஜவேல் மற்றும் கிராம மக்கள் காரை வழிமறித்து நிறுத்தி, மயானத்தை ஆக்கிரமித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாவிட்டால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறினர்.
அதனைத் தொடர்ந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், நகராட்சி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மயானத்திற்கு உரிய இடத்தை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், போதிய இடம் இல்லையெனில் வேறு பகுதியில் அமைக்க அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக வருவாய்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்குப்பின் முடிவெடுக்கப்படும் என்றார். அதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அமைச்சர் மற்றும் எம்.பி., சென்ற கார்களை பொதுமக்கள் வழிமறித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.