/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்: நள்ளிரவு வரை பள்ளியில் பதுங்கிய மாணவர்
/
விருதையில் ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்: நள்ளிரவு வரை பள்ளியில் பதுங்கிய மாணவர்
விருதையில் ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்: நள்ளிரவு வரை பள்ளியில் பதுங்கிய மாணவர்
விருதையில் ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்: நள்ளிரவு வரை பள்ளியில் பதுங்கிய மாணவர்
ADDED : ஜூலை 01, 2024 06:46 AM
விருத்தாசலம்: வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தியது குறித்து பெற்றோரிடம் கூறுவதாக ஆசிரியர் கண்டித்ததால் பயந்த மாணவர், பள்ளியிலேயே விடிய விடிய ஒளிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்தியுள்ளார். இதையறிந்த ஆசிரியர், மொபைல் போனை அவரிடம் இருந்து பறித்து, பெற்றோரிடம் கூறுவதாக கண்டித்துள்ளார். தந்தை அடிப்பார் என அச்சமடைந்த மாணவர், மதிய இடைவேளையின்போது, வகுப்பறைக்கு மேலே உள்ள மாடிக்கு சென்று ஒளிந்து கொண்டார்.
மதிய இடைவேளை முடிந்து வகுப்பறையில் மாணவரை காணவில்லை. ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளி முழுவதும் தேடினர்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளி முதல்வர், மாணவர் மாயமானது குறித்து மங்கலம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். நள்ளிரவு கடந்ததால், மாணவரின் பெற்றோர் அச்சமடைந்து பள்ளி வாசலில் அழுது புலம்பினர். பள்ளி நிர்வாகத்தை திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில், நள்ளிரவு 2:00 மணிக்கு மேல், பள்ளி வளாகத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வகுப்பறைக்கு மேலே உள்ள மாடியில் மாணவர் துாங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. நிம்மதியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், மாணவரை மீட்டு, போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மொபைல் போன்பயன்படுத்தியதை கண்டித்ததால், மாணவர் பள்ளி வளாகத்திலேயே ஒளிந்திருந்த சம்பவம், விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.